பிரித்தானிய சுற்றுலாப் பயணி தன்னை நாடு கடத்தும் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல்!


பிரித்தானிய சுற்றுலாப் பயணியான கெய்லி பிரேசர், தன்னை இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

விண்ணப்பத்தில் பிரதிவாதிகளாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தனது விசாவை இரத்து செய்ய தன்னிச்சையான தீர்மானத்தை எடுத்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான உள்ளடக்கத்தை பிரேசர் வெளியிட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த முடிவு செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடிதமொன்றில் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானம் அநீதியானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தை கெயில் பிரேசர் தனது மனுவின் மூலம் கோரியுள்ளார்.