மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைபோசாக்குடையவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவற்காக ''தேனகபோஷா'' சத்துமா அறிமுகம் !


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைபோசாக்குடையவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவற்காக ''தேனகபோஷா'' சத்துமா நேற்று  (29) திகதி மட்டக்களப்பில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த நிகழ்வினை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் ஏற்பாடு செய்திருந்ததுடன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமைதாங்கி நடாத்தியுள்ளார்.

குறித்த அறிமுக விழாவின் போது
சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போசாக்கின்மையை சீர்செய்வதற்காக உடனடியாக வழங்குவதற்காக சத்துமா திட்டம் மாவட்ட மட்டத்தில் அமுள்ப்படுத்தப்படவுள்ள நிலையில், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் உள்ள அரச அரச சார்பற்ற மற்றும் ஏனைய துறைசார் நிறுவனங்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வதன் ஊடாக இத்திட்டத்தினை சிறப்பாக நடாத்திச் செல்லலாம் என்பதன் அவசியம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் 2-5 வயதுடைய சிறுவர்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்களின் வளர்ச்சி வீதத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக வைத்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் குறித்த திட்டம் நடைமுறைப்படத்தப்படவுள்ளதுடன், இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் அவர்களினுடைய உடல் உளரீதியான வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியம் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சத்துமாவினை துரிதகதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதா அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இதன் போது பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகங்களினுடாக சத்துணவு வழங்கல் தொடர்பாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், உதவி வலயக் கல்விப் பணிப்பாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன தலைவர்கள், துறைசார் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.