முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் 21 ஆம் திகதி குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்று கூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச்சென்ற மக்கள் அங்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றைய தினம் போராட்டம் ஆரம்பிக்கின்ற வேளையிலே அந்த இடத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை அங்கிருந்த இராணுவத்தினர் விபரங்களை பதிவிடுமாறு கோரியுள்ளனர்.
இருப்பினும் ஊடகவியலாளர்கள் விபரங்களை பதிவிட முடியாது என மறுப்புத் தெரிவித்த நிலையில் அங்கு மக்கள் அதிக அளவில் ஒன்று கூடிய நிலையில் அவர்கள் அந்த பதிவு முயற்சியை கைவிட்டு உள்ளனர்.
தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான போராட்டங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் போராட்ட நேரங்களிலும் அதன் பின்னரும் அச்சுறுத்தப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ச்சியாக காணப்படுகிறது.