மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை !


மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி, பாரதிபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (20) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாயி சோமசுந்தரம் சிறிகந்தராசா (வயது 50) என்பவரே குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று, மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் சிறிகந்தராசாவின் வீட்டுக்கு வந்து அவரை வெளியே வருமாறு அழைத்த சந்தேகநபர், அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருமைத்துரை கிருபாகரன் (வயது 47) எனும் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.