திருக்கோவிலில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு !


அம்பாறை, திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள நேருபுரத்தில் மோட்டார் சைக்கில் ஒன்றுடன் லொறி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் ஹிதாயாபுரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அப்துல் காதர் முகமது அலாவூதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பொத்துவில் ஹிதாயாபுரத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சம்பவதினமான நேற்று இரவு 7.20 மணியளவில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்துக் கொண்டிருந்த போது அக்கரைப்பற்று பகுதியில் இருந்து பொத்துவிலை நோக்கி பிரயாணித்த லொறியுடனேனே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த விபத்தையடுத்து குறித்த லொறியுடன் லொறி சாரதி தப்பி ஓடியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தீருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.