தனியார் மயமாகும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் !


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பெற்றோலிய விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எரிசக்தி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பெற்றோலிய விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள அரசியலமைப்புக்கு முரணான சரத்துக்கள் மற்றும் பிரிவுகளை திருத்தி உடனடியாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி, பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை சேர்த்து சட்டமூலத்தை நிறைவேற்றலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 1,250 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியை தனியார் துறை விநியோகஸ்தர்களுக்கு மாற்றுவது தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (21) இடம்பெற்ற நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்கு அமைய 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவற்றில் சில தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், எரிபொருளை விநியோகிப்பதற்கும், எரிபொருளை விற்பனை செய்வதற்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுமார் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக இது தொடர்பான கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளது.