# .

மார்ச் 9 உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்!


நெருக்கமான சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல, வர்த்தமானி மூலம் அறிவிப்பதே சட்டம் எனவும் மஹாநாம ஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

21ஆவது அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னர் எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பு பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் வர்த்தமானி அறிவித்தல் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் திகதியை தீர்மானித்தல் போன்ற முக்கிய பணிகளுக்கு முழு ஆணைக்குழுவும் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை எனக் கூறுவதன் மூலம் மறைமுகமாக என்ன தெரிவிக்கப்படுகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.