69 இலட்சம் ரூபா பணம் மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

கொழும்பு கோட்டை பகுதியில் லொறி ஒன்றிலிருந்து 69 இலட்சம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை (17)கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கொள்ளுப்பிட்டியில் இருந்து கோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்றை சோதனையிக்குட்படுத்தியுள்ளார்.

இதன்போது சாரதியின் ஆசனப்பகுதிக்கு அருகில் இருந்த பொதியிலிருந்து நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் தன்னை மீன் விற்பனை செய்யும் ஒருவர் என அடையாளப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் தொலைபேசியின் ஊடாக வேறு இருவரை தொடர்பு கொண்டுள்ளதோடு, குறித்த இருவரும் பொலிஸாரிடம் 5 இலட்சம் ரூபாய் பணம் பெற்று தருவதாகவும் அதன் பிரகாரம் லொறியின் சாரதியை விடுவிக்குமாறும் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கோரியுள்ளனர்.

இருப்பினும், பொலிஸ் அதிகாரிகள் மூலம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு லொறியுடன் கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் பொலிஸாரினால் லொறி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 69 இலட்சத்து 45 ஆயிரத்து 500 ரூபாய்  பணம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கையடக்கத்தொலைபேசியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய ரெககல்பொட, களுத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் அவர் லொகன்வத்த, அஹுங்கல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.