அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு தலைவர் நியமனம் : ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின் இறுதித் தீர்மானம் : பிரசன்ன ரணதுங்க!

அரச நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள்  ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர்  சுமுகமான தீர்மானம்  ஒன்று எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதம கோலாசான்,  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு தொடர்பில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தொடர்பில் தெரிவித்து வரும் அதிருப்தியை கவனத்தில் கொண்டு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி  அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு விவகாரத்தில் சுமுகமான தீர்மானம் ஒன்றை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவராக நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தாலும் குழுவில் பெரும்பாலானோரின் இணக்கப்பாட்டின் கீழ் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இவ்விடயம் தொடர்பில்  பாராளுமன்றத்திலும் வெளியிலும்  வீண் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற  பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவை பதவி விலக்குவது தொடர்பான விவாதத்தில் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

அந்த வகையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜனாதிபதி அதற்கான இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தாலும் ஜனாதிபதியே அவர் வேறு கட்சி உறுப்பினர் என பல தடவை அவரே தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பெரும்பான்மை கட்சி என்ற வகையில் நாம் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்க முடியும். அதற்கிணங்க எமது குழு ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்றார்.