நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் நடமாடும் சேவை!


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அகதிகளின் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான மாபெரும் நடமாடும் சேவையொன்று மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சினால்,  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும்  2023.05.27 திகதி  காலை 9.00 மணி தொடக்கம்  மட்டக்களப்பு  ஆசிரியர் கலாசாலையில் குறித்த மாபெரும் நடமாடும் சேவையானது இடம் பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  பொதுமக்கள் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய  மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அகதிகள் உள்ளிட்டோர் குறித்த  நடமாடும் சேவையில் கலந்துகொண்டு தங்களுக்கான பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம், குடிவரசு, குடியகல்வு திணைக்களம், தலைமைப் பதிவாளர் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அலுவலகம், மத்தியஸ்தசபை ஆணைக்குழு மற்றும் சட்ட உதவி ஆணைக்குழுஎன்பன கலந்து கொள்ளவுள்ளதோடு, குறித்த நடமாடும் சேவையின் மூலமாக குடியுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்,பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்வது தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவ் ஆவணங்களை பெற்றுக் கொள்வது தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுதல்,

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வது, திருத்தம் செய்வது மற்றும் காணாமல்போன அடையாள அட்டைகளுக்கான இரண்டாவது பிரதி ஒன்றினை வழங்குவது தொடர்பான சேவைகளை வழங்குதல், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு காணுதல், இழப்பீடுகளுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்வது தொடர்பாக விண்ணப்பித்தவர்களின் கோவைகளில் காணப்படும் குறைபாடுகளை பூர்த்தி செய்தல்,

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடாத்துதல் மற்றும் அவ் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்தல், மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தினை நடாத்துதல்,

காணி தொடர்பாக விசேட மத்தியஸ்த சபை தொடர்பான விழிப்புணர்வு வழங்குதல், சட்ட ஆலோசனையை வழங்குதல் மற்றும் ஆலோசனை முகாமினை நடாத்துதல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ள முடிவதுடன், குறித்த நடமாடும் சேவைக்கு USAID நிறுவனம் அனுசரனை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.