பல்கலைக்கழக Z புள்ளி தொடர்பில் தொடரும் குளறுபடிகள்

உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் A சித்திகள் பெற்றும் பல்கலைக்கழகம் செல்ல முடியாவிட்டால் கல்வி முறையில் உள்ள நியாயம் தான் என்ன என அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  கேள்வி எழுப்பியுள்ளது.
Z புள்ளி வெளியிடப்பட்டதன் பின் ஏற்கனவே பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்  தெரிவித்துள்ளார்.

இதனால் பல்கலைக்கழக மாணவர் அனுமதி தொகையை அதிகரித்து, பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அநீதியின்றி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2012ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுத ஒரு வாரத்தில் அனுமதி பெற்றுத் தருவதாக அரசாங்கம் கூறியுள்ள போதும் மாணவன் ஒருவனால் ஒரு வாரத்தில் பரீட்சைக்குத் தோற்றத் தயாராக முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மாத்தறையில் தெரெசா திஸானி முன்னர் மூன்று A சித்தி எடுத்து மாவட்ட நிலையில் 232வது இடத்தை பிடித்திருந்தார். Z புள்ளி வெளியான பின் அவரது மாவட்ட நிலை 523ஆக மாறியுள்ளது. மாத்தறையில் 325 பேர் கலை பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன்படி அவரால் தற்போது பல்கலைக்கழகம் செல்ல முடியாது. இது என்ன நியாயம்?

ஹம்பாந்தோட்டையில் துசார விமுக்தி 3 A சித்தியுடன் மாவட்டத்தில் 4ம் நிலையில் இருந்தார். Z புள்ளி வெளியிட்டதன் பின் அவரது மாவட்ட நிலை 216 ஆகும். ஹம்பாந்தோட்டையில் 210 பேர் மாத்திரமே பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவர். இவருக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காது. இது என்ன நியாயம்?

இவ்வாறு  நாடு முழுவதும் பல மாணவர்கள் இந்த பிரச்சனையை எதிர் நோக்கியுள்ளனர். இதன் மூலம் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.