பாடசாலைகளுக்கிடையே எறிபந்து சுற்றுப்போட்டியில் சம்பியன்.

அகில இலங்கை எறி பந்து சம்மேளனத்தினால் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட எறிபந்து சுற்றுப்போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணி மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கும்   செவ்வாய் கிழமை (21) ஏறாவூரில் வரவேற்பளிக்கப்பட்டது.

 ஞாயற்றுக் கிழமை (19) இரத்தினபுரி- குருவிட்ட மைதானத்தில் நடாத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த 75 பாடசாலைகள் பங்குபற்றின.

 இப்போட்டியில் ஏறாவூர்- றகுமானியா  மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்ட அலிகார் தேசிய பாடசாலை அணியினர் ஏறாவூர் பஸ் நிலையச் சந்தியிலிருந்து பிரதான வீதி வழியாக பாண்ட் வாத்திய இசை மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

 பாடசாலை அதிபர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற இவ்வரவேற்பு நிகழ்வில் வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான  ஏ.எஸ்.இஸ்ஸதீன், கே. சிதம்பர மூர்த்தி, பிரதேச செயலர் எஸ்.எல்.எம்.ஹனிபா மற்றும் கோட்டக்கல்வியதிகாரி ஐ.எல்.எம்.மஹரூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.