தன் தொழிலில் வெறும் 2 வீதமே வெற்றி ஆனால் உலக சாதனை வீரன்


( லட்சுமி )
முத்தையா முரளிதரன்  ஆம் கிரிக்கட் உலகின் முடி சூடா மன்னன். இவர் பெயர் உச்சரிக்காத கிரிக்கட் ரசிகர்கள் உலகில் இல்லை எனலாம் இந்த சாதனை நாயகனின் வாழ்வு நம் இளைய தலைமுறைக்கு ஒரு பாடம்.

என்னவென்றால் இவர் தனது கிரிக்கெட் வாழ்வில் சர்வதேச ஒருநாள் ,டெஸ்ட் மற்றும் T /20 போட்டிகளில் மொத்தமாக வீசியது 63132 பந்துகள் பெற்றுக்கொண்டுள்ள விக்கெட்டுக்கள் 1347 ஆக மொத்தத்தில் 61785 பந்துகள் விக்கெட் எடுக்காமலேயே வீசப்பட்டுள்ளன.
இதுதான் நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும் இன்று உள்ள இளைஞர்கள் ஒரே இரவில் பெரியவராக பார்ப்பதும் கிடைக்கும் வேலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் பதவி உயர்வுகளை எதிர் பார்ப்பதும் ஒரு இடத்தில் வேலை பார்க்கும் போது இன்னோரிடத்தில் சில சலுகைகளுக்காக அடிக்கடி இடம் மாறி வேலைபுரிவதுமாக வாழ்க்கையை வீணடித்து இறுதியில் ஒன்றில் கூடி நிலையாக இருந்து வெற்றிபெறாமல் வாழ்வை கழிக்கிறார்கள்.

முரளிதரனின் சாதனைதான் நமக்கு தெரியும் ஆனால் ஆழ்ந்து உற்றுநோக்கினால் தான் வீசிய பந்துகளில் 2 வீதமான பந்து வீச்சுக்களே அவருக்கு சாதகமாக அமைந்துள்ளன ஆனாலும் உலக சாதனை வீரர்
அதே வேளை மீதம் 61785 பந்துகளில் அவர் கொடுத்த ஓட்டங்கள் 30803 இந்த ஓட்டங்களில் எத்தனையோ துடுப்பாட்ட வீரர்களின் சாதனைக்குரிய ஓட்டங்களும் அடங்கும்.
இவரும் என்னடா நாமும் வீசுகிறோம் வீசுகிறோம் விக்கெட் வருதில்லையே ஆக 2 வீதமான பந்துகளே விக்கெட்டை வீழ்த்துகின்றன அதுமட்டுமல்லாது நம் பந்துகளில் மற்றவர்கள் ஓட்டங்களை பெற்று அவர்கள் சாதனைகளை படைக்கிறார்கள் என்று நினைத்து வேறு துறையை நாடி இருந்தால் இன்று உலக சாதனை வீரராக திகழ்ந்து இருக்க மாட்டார்.
அதை விட இவர் சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து தூக்கி வீசப்பட வேண்டும் என்பதற்காக  சர்வதேச ரீதியில் ஏட்படுத்தப்பட்ட பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை அது உங்களுக்கு தெரியும்.

இளைஞர்களே வாழ்வில் வெற்றி,சாதனை இலகுவில் கிடைத்துவிடாது ஆரம்பம் எல்லாவற்றுக்கும் கஷ்டமானதாகவே அமையும் நாம் ஒரு துறையை தேர்ந்து எடுத்துவிட்டால் அதை நேசிக்கவேண்டும் எத்தனை தடைகள் வந்தாலும் மனம் சோர்வடையாமல் அவற்றை எவ்வாறு முறியடித்து வெற்றி கொள்வதென்று சிந்தித்து இன்னும் வேகமாக அடியெடுத்து வைத்து நமது இலக்கில் குறியாக இருந்து தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
ஒருவர் செய்த செயலில் வெறும் 2 வீதமே வெற்றியளித்து உலக சாதனை படைக்க முடியுமென்றால் நீங்கள் அதிஷ்டசாலிகள் உங்கள் துறைகளை சிந்தித்து பாருங்கள் உங்கள் வெற்றி விகிதம் இதைவிட அதிகமானதாகவே இருக்கும் அவ்வாறெனில் தொடர்ந்து உறுதியாக  முயற்சித்தால் வெற்றி உங்களதே.

வெற்றி இலக்கு தாமதமானால் இலக்கை அடையும் வழிமுறைகளை மாற்றுங்கள் இலக்கை மாற்றாதீர்கள்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.