சந்திவெளி மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவமொன்றில் மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஸ்ரீதரன் திவ்யசாகரி எனும் யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கிச்சை பயனின்றி நேற்று சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிரோஷன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
வெள்ளிக்கிழமை இரவு திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது இரவு 10 மணியளவில் தேநீர் அருந்துவதற்காக சந்திவெளியில் கார் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த காரில் உயிரிழந்த யுவதி, அவரின் தாய் யுவதியின் பெரியப்பா , கார்ச் சாரதி ஆகியோர் இருந்துள்ளனர்.
அந்த நேரம் அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இரண்டு இளைஞர்கள் யுவதியைக் கூட்டிற்று மோட்டார் சைக்கிள் ஆசனத்தின் நடுவில் ஏற்றிக் கொண்டு அதிவேகமாகப் பயணித்துள்ளனர்.
அதன்போது யுவதியின் தாய் மற்றும் பெரிய தந்தை ஆகியோர் தாம் வந்த காரில், யுவதியைக் கொண்டு அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையிலேயே அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதால் விபத்துச் சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் கடத்தப்பட்ட யுவதியும், கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பெற்றுவந்த யுவதி சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யுவதியைக் கூட்டிச் சென்றதாகக் கூறப்படும் காயங்களுக்குள்ளான இளைஞர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை யுவதியையும் தங்கள் இருவரையும் காரில் வந்தவர்கள் காரால் மோதியும் அதன் பின்னர் கடுமையாகத் தாக்கியதாக மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வாக்குமூலத்தின்படி காரில் வந்த யுவதியின் பெரியப்பா மற்றும் கார்ச் சாரதி கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யுவதியின் உடற்கூற்றுப் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை குருநாகல் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி இலங்கரத்னவினால் குருநாகலில் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே குறித்த யுவதிக்கும் இளைஞனுக்கும் ஏற்கெனவே பல வருடங்களுக்க முன்னர் காதல் தொடர்பு காரணமாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து வழக்கு தொடரப்பட்டு சமரசமாகத் தீர்த்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த யுவதியை உயர் கல்விக்காக அவரது தாய் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்கின்ற விவரமும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
குறித்த யுவதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியிருந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.