மீன் பிடித் தொழிலாளி ஒருவரின் வீடு தீயினால் எரியுண்டு சேதம்

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் வசிக்கும் ஏழை மீன் பிடித் தொழிலாளி ஒருவரின் வீடு தீயினால் எரியுண்டு நாசமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பேத்தாழை கருங்காலிச் சோலையைச் சேர்ந்த முத்துவேல் சந்திரன் என்பவரது வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவித்தனர்.
நேற்று  வியாழக்கிழமை(28) மதிய உணவு உண்ட பின்னர் தாம் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாகவும் தமது மனைவி தென்னம் ஓலை மட்டை இழைப்பதற்க்காக ஆற்றங்கரைக்கு சென்றதாகவும் இதன்போது அடுப்பில் இருந்த தனல் அருகில் இருந்த வீட்டின் ஓலையில் தீ பரவி வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  மு.சந்திரன் தெரிவித்தார்.

தமது வீடு தீப்பற்றுவது தொடர்பாக உறவினர்கள் தெரிவித்ததை தொடர்நது வந்து பார்த்த போது தமது ஓலை வீடு மற்றும் அங்கிருந்த பொருட்க்கள் மீன்படி உபகரணங்கள் ஆடைகள் மற்றும் பாடசாலை புத்தகங்கள் என பலதும் தீயில்  எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிவித்தார்.

தமது வாழ்வாதாரமாக  அன்றாடம் மீன் பிடி தொழில் புரிந்தே வாழ்க்கை நடாத்தி வருவதாகவும். தமக்கு இவ்வாறு  ஏற்பட்டுள்ளமை தமது பொருளாதாரத்தற்கு பெரும் பின்னடைவினை தந்துள்ளதாகவும் தாம் எவ்வாறு இதில் இருந்து மீண்டு கொள்வது என்று அழுது புலம்பினார்.

தமது மனைவி பிள்ளைகளுடன் வாழ்வதற்ககு மீண்டும் ஒரு ஓலை வீட்டினை எவ்வாறு தயாரித்துக் கொள்வது உடுப்பதற்கு உடையின்றியும் சமைப்பதற்கு சமையல் பாத்திரம் கூடட கொள்வனவு செய்வதற்கு பணம் இன்றி அல்லல் உறுவதாக சோகம் தோய்ந்த முகத்துடன் மீனவரான சந்திரன் தெரிவித்தார்.