
(பா.மோகனதாஸ்)
கண்ணகி கலை இலக்கிய விழாக்கள் வெறுமனே கூடிக்களியும் கேளிக்கை நிகழ்வு அல்ல. கிழக்கிலங்கை தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி கலாசாரத்தை பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் வகையிலும் அப்பண்பாட்டின் அடிப்படையில் எழுந்த கண்ணகி கலை இலக்கியங்களை மக்கள் மயப்படுத்தி பரவலாக்கும் வகையிலும் கிழக்கிலங்கைத் தமிழ்ச் சமூகத்தை ஒரு பண்பாட்டுத் தளத்தில் ஒன்றிணைத்து அதன்மூலம் அவர்களது சமூகப் பொருளாதார பண்பாடு கல்வி கலையிலக்கியம், சூழல் பாதுகாப்பு மற்றும் ஆன்மீக மேம்பாட்டை நோக்கி ஆற்றுப்படுத்தும் ஓர் சமூக அசைவியக்கமாகவே கண்ணகி கலையிலக்கிய விழாக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என கண்ணகி கூடலின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
கண்ணகி கலையிலக்கிய விழா களுதாவளை கலாசார மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றபோது, அவ் விழாவின் தொடக்கவுரையின் போதே அவர் இவ்வாறு உரையாற்றினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஒரு தேசிய இனம் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கு நிலமும் மொழியும் பொருளாதாரமுமே அவசியம்.அத்துனை அவசியமானதுதான் அம்மொழியில் எழுந்த கலையிலக்கியங்களையும் அவ்வினத்தின் பண்பாட்டு விழுமியங்களையும் பாரம்பரிய பழக்கவழக்கங்களையும், அவ் இனம் காலம் காலமாக நம்பிக்கை வைத்துள்ள தொன்மங்களையும் கட்டிக்காத்து பேணி வளர்த்து அவற்றை அடுத்த சந்ததிக்கு கையளிக்க வேண்டும்.
இந்தப் பின்னணியிலேதான் இன்றைய தமிழ்ச்சூழலிலும் இன்றைய உலகின் போக்கிலும் யுத்தவன்முறைகளாளும் இயற்கை அனர்த்தங்களினாலும் உலகமயமாக்கம் தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி,நுகர்வுக் கலாசாரம், பன்னாட்டு நிறுவனங்களின் பணம் குவிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட வணிக நடவடிக்கைகள்் இயந்திர நாகரீகம் போன்ற அகப்புறத் தாக்கங்களால் நமது கலையிலக்கிய வடிவங்களும் பண்பாட்டு விழுமிய தொன்மங்களும் கற்பிழந்து விடாமல் காப்பாற்றும் அதி உன்னதமான நோக்கோடுதான் இவ்விழாக்கள் இடம்பெறுகின்றன.
சிலப்பதிகாரம் இல்லறம், துறவறம் மற்றும் அரசியல் அறம் மூன்றையும் போதனை செய்வதுடன் இல்லறத்திற்கு இலக்கணமாக கண்ணகியும் துறவறத்தின் குறியீடாக கவுந்தியடிகளும் அரசியல் அறத்தின் அடையாளமாக பாண்டிய மன்னும் பாத்திரங்களாக வார்க்கப்பட்டுள்ளன.
இல்லறமானது "இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" என்ற குறளுக்கமைவாக வாழுவோம் என்ற செய்தியையும் துறவறமானது லெளகீகம் என்பது தனக்குத்தான் உணவு தேடுவது.ஆன்மீகம் என்பது இன்னொருவருக்கு உணவு தேடுவது எனும் அடிப்படையில் நோக்குவோம் என்ற செய்தியையும் அரசியல் அறமானது "இன்றைய தமிழ்ச்சூழலில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக வருவதற்கு ஆசைப்படுபவர்களும் சிலப்பதிகாரம் கூறும் அரசியல் அறத்தை மனங்கொள்ள வேண்டும்.அதற்கேற்ப மக்களும் விழிப்படைய வேண்டும் என்றார்.













.jpg)

