(க. விஜயரெத்தினம்)
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சர்வதேச தலையீட்டினை கோரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் சனிக்கிழமை(13)காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் வடகிழக்கு மாகாண காணாமலாக்கப்பட்ட உறவுகள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
வலிந்து காணாமலாக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அமைப்புக்களின் தலைவி திருமதி. அமலநாயகி அமலராஜ் தலைமையில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராசா,காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தாய்மார், மனைவிமார், சகோதர சகோதரிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மனைவிமார், தாய்மார் சுலோக அட்டைகளையும்,புகைப்படங்களையும் தாங்கி நின்று தங்களின் உறவுகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் தங்களின் ஆதங்கத்தை வலியுறுத்தினார்கள்.
இதன்போது "ஐக்கியநாடுகள் சபையே நீயும் எம்மை ஏமாற்றாதே ...?" ,"சிங்கள பௌத்த நலன்களுக்குள் எமக்கான நீதி புதைக்கப்பட்டு விட்டதா...?" ,"உள்நாட்டுக்குள் எமக்கு தீர்வு வேண்டும், ஓ.எம்.பீ ஏமாற்றும் வேலை, சர்வதேச விசாரணையே எமக்குத்தேவை", "இலங்கை அரசாங்கத்திடம் தீர்வு இல்லை, காணமலாக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்,காணாமல் ஆக்கப்பாட்டவர்கள் வீட்டுக்கு வரும்வரை நாங்கள் போராடுவோம்", எமது உறவுகளை வலிந்து கடத்தியமை இன அழிப்பாகும்,எமது அப்பா எங்கே?, "ஓ.எம்.பீ.வேண்டாம் சர்வதேச விசாரணையே காணாமலாக்கப்பட்டவர்களின் தீர்வு கிடைக்கும்","எனது கணவன் எங்கே என்று சிங்கள அரசு பதில் சொல்லு", "வல்லரசு கனவுகளுக்கும்,பிராந்திய நலன்களுக்குமான நீதி புதைக்கப்பட்டு விட்டதா...? சர்வதேசமே தலையிட வேண்டும்", "எமது இனத்தின் அடையாளங்கள்,வரலாறு அழிவுகள் ,நில ஆக்கிரமிரப்பிக்களையும் தொடர்ந்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்", "சிங்கள இராணுவமே எமது உறவுகள் எங்கே...?, முள்ளி வாய்க்காலின் பின்பும் உன் இரத்தப்பசிக்கு தீர்வில்லையா...?, எங்கள் பிள்ளைகளை உறவுகளை நாங்கள் நம்பிக்கையிடம் ஒப்படைத்தோம் எங்கள் உறவுகள் எங்கே....?, ஜனாதிபதி, பிரதமர், இராணுவத்தளபதி போன்றோர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை எங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பாவம் சும்மா விடாது...? என கவயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது உறவுகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கையை முன்வைத்தார்கள்.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கொளுத்தும் வெயிலில் வெயிலை பொருட்படுத்தாமல் தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.