கல்குடாவில் சம்பளம் கோாிய ஊழியா்கள் உடனடி பணி நீக்கம் ! கதவினை பூட்டி வெளியேற்றப்பட்டனர்.

மு.கோகிலன்

கல்குடாவிலுள்ள சக்தி வாணி தனியார் ஆயுள்வேத மருத்துவ நிலையத்தில் தொழில் புரிந்து வந்த ஊழியர்கள் தமது கடந்த மாத சம்பளப் பணத்தினை வழங்குமாறு கோரியபோது அதன் நிறைவேற்று பணிப்பாளர் அவர்களை வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென 2 நாட்களாக தொடர்ந்து பணிப்பஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

 கல்குடா பொலிஸ் நிலையத்தில் குறித்த நிலையத்தி;ன் பணிப்பாளருக்கு எதிராக ஊழியர்களினால் தமது நிலை குறித்து முறைப்பாடு ஒன்றை  செவ்வாய் கிழமை மாலை பதிவு செய்திருந்தனர்.

 அது தொடர்பான  விசாரணை   புதன் கிழமை காலை கல்குடா பொலிஸ் நிலையத்தில்  இடம்பெற்றது.

விசாரணையின் போது   ஊழியர்களுக்கான சம்பளம் பணத்தினை வழங்குவதாக தெரிவித்து தமது நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு நிறைவேற்றுப் பணிப்பாளரினால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன்போது நிலையத்திற்கு சென்ற ஊழியர்கள் உள்ளே செல்ல விடாமல் தடுக்கப்பட்டு கதவினை பூட்டி வெளியேற்றப்பட்டனர்.

 தற்போது குறித்த நிலையத்திற்கு முன்பாக  நின்று ஊழியர்கள் மீண்டும்  கவனயீர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்த சம்பளப் பணம் ஒழுங்காக வழங்கப்படாமை,பெண்களுக்கான பாதுகாப்பு இன்மை சம்பளத்தில் அதிகரிப்பு, ஊழியர் சேமலாப நிதி அறவீடு, மற்றும் ஒரு நிர்வாக தலைமைத்துவம் வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து  வந்த நிலையில் இவ் அதிரடி நடவடிக்கை தங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.