(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்தின் உஹன, தமன பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டது எனினும் அம்மாவட்டத்தின் 04 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.உஹன, தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ரஜவெவ, மடவலலந்த, பஹலலந்த மற்றும் நவகிரியாவ ஆகிய பகுதிகளுக்கே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமிலுள்ள கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனை தொடர்ந்து அங்கு பணியாற்றிய சிலர் விடுமுறையில் உஹன, தமன பிரதேசத்திற்கு வருகை தந்திருந்தனர். இதனை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(24) ஊரடங்கினை அமுல்படுத்துவதாக அறிவித்திருந்த பின்னர் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் இன்று காலை வழமை போன்று பொதுச் சந்தை , பல்பொருள் அங்காடிகள், வணிக நிலையங்கள், வங்கிகள் திறக்கப்பட்டிருத்தோடு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றன . போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் குறைந்தளவு மக்கள் நடமாட்டத்தை அவதானிக்க முடிகின்றது.
இதே போன்று அம்பாறை மாவட்டத்தின் ஏனைய கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.
கடந்த தினங்களுக்கு முன்னர் இம்மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. ஆனால் இன்றைய தினம் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், உள்ளிட்ட முக்கிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டன.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸார் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.
அநேகமான இடங்களில் வியாபார நிலையங்கள் சுப்பர்மார்க்கெட்டுகள் , பாமசிகள் , வங்கிகள் ,எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

















.jpg)


