காணொளி: ஏறாவூர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு !



(ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ நாஸர்)
மட்டக்களப்பு- ஏறாவூர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சம்பவம் இன்று 12.05.2020 அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் உண்டியல் கடந்த ஐந்து வருடகாலத்தில் மூன்றாவது முறையாக உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிருவாகிகள் கூறுகின்றனர்.

வருடாந்த உற்சவம் நிறைவுற்று சில நாட்களில் இந்த உண்டியல் திருடர்களினால் உடைக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. எனினும் இம்முறை வருடாந்த உற்சவம் பாரியளவில் நடாத்தப்படாதபோதிலும் இந்த உண்டியல் கடந்த ஐந்து மாதகாலமாக திறக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

திருடன் ஆலய சுற்றுமதிலின் பின்பக்கமாக ஏறிவந்து மின்விளக்குகளை அணைத்துவிட்டு பூட்டினை வெட்டி தாள் நாணயங்களை திருடிச் சென்றுள்ளதாக அறியவருகிறது.

உண்டியலிற்குப் போடப்பட்டிருந்த பூட்டின் துண்டுகள் வீதியோர வடிகாணில் வீசப்பட்டிருந்தன.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.