கொக்கட்டிச்சோலையில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான விற்பனை நிலையம் முற்றுகை!


கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நூதனமான முறையில் இயங்கிவந்த சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் நேற்று (வியாழக்கிழமை) இரவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 170மில்லி லீற்றர் அளவுகொண்ட 750மதுபான போத்தல்களும் பெரியளவிலான 48 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டதுடன் இது தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் அசோக குணவர்த்தன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.