விமானங்களுக்கான எரிபொருளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை?
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாவிட்டால், தனியார் துறையினருக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், அமைச்சும் தேவையான அனுமதி மற்றும் வசதிகளை வழங்கினால் விமான எரிபொருளை தமது சொந்த செலவில் இலங்கைக்கு கொண்டு வந்து விநியோகிக்க தயார் என விமானத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், அவற்றின் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாளொன்றுக்கு சுமார் 600 மெற்றிக் தொன் விமான எரிபொருளை வழங்க முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விமான எரிபொருளை விநியோகிக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் தினசரி தேவைப்படும் எரிபொருளின் அளவு மற்றும் அதனை வழங்குவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முறையான ஆய்வுடன் முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிப்பாக சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகவுள்ள எதிர்வரும் மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகளவான விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே தேவையான அளவு விமான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குவது அவசியமானது எனவும் விமான நிறுவன பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.