மதுபானத்துடன் கைதாகி பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பெண் திடீர் மரணம்!

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (24) இரவு  திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் பாணந்துறை திக்கல பகுதியைச் சேர்ந்த நயனா ரோஷினி என்ற 52 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் குழுவொன்று நேற்றிரவு குறித்த வீட்டை சுற்றிவளைத்துள்ளது.

இதன்போதே குறித்த பெண்  சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு  அழைத்து வரப்பட்ட நிலையில் திடீரென சுகவீனமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதனையடுத்து  குறித்த பெண்ணின்  குடும்ப உறுப்பினர்களை அழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லுமாறு  அறிவுறுத்தப்பட்டது. பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.