மட்டக்களப்பு ஆரையம்பதியில் வங்கியை உடைத்து கொள்ளையிட முயற்சி : கொள்ளைக்காரன் தப்பி ஓட்டம்!பூட்டப்பட்டிருந்த அரச வங்கி கதவை உடைத்து உட்புகுந்து கொள்ளையிட முயற்சித்தபோது வங்கி அவசர சத்த ஒலியை அடுத்து பொதுமக்கள் கொள்ளைக்காரனை பிடிக்க முற்பட்டபோது கொள்ளைகாரன் தப்பி ஓடிய சம்பம் இன்று (01) அதிகாலையில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வங்கியை வங்கி முகாமையாளர் வழமை போல் நேற்று மாலை பூட்டிவிட்டு சென்ற நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணி அளவில் கொள்ளையன் ஒருவன் வங்கியின் பிரான கதவை உடைத்து அதன் பின்னர் கண்ணாடி கதவை உடைத்து உள் நுழைந்துள்ளான்.

இதன்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அவசர ஒலி சத்தம் எழுப்பியதை அடுத்து வங்கிக்கு அருகிலுள்ளவர்கள் வெளியே வந்து வங்கியை நோக்கி சென்ற போது கொள்ளையடிக்க முயற்சித்திருப்பது தெரியவந்ததை அடுத்து கொள்ளைகாரனை பிடிக்க முற்பட்ட போது கொள்ளைகாரன் அவர்கள் மீது கல்லால் தாக்குதல் நடாத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கொள்ளையடிக்க கொண்டுவந்த அலவாங்கு தோல்பை செருப்பு என்பவற்றை மீட்டுள்ளதுடன் பொலிஸ் தடவியல்பிரிவு அழைக்கப்பட்டு மேப்பநாய்களுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.