மாணவிகளுக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று தொந்தரவு செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் புதன்கிழமை (15) தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் குறிப்பாக பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு, தொலைபேசியில் புகைப்படம் எடுப்பதாகவும் பெற்றோர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக நீதி மன்றினுாடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்