மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி காணிப்பத்திரம் கையளிப்புடன் அதிபர் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு!

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் நீண்டநாள் தேவையாக இருந்த அதிபருக்கான காரியாலயம் உத்தியோகபூர்வமாகநேற்று  (17) திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் முதல்வர் ஐ.உபைதுல்லாஹ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சகுதுல் நஜீம்,விஷேட விருந்தினராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் மற்றும் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன செய்ற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும், கௌரவ அதிதியாக கலந்து கொள்ள இருந்த பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலிக்கு பதிலாக காணி உத்தியோகத்தர் ஏ.எச்.எம் கிபாயத்துல்லாவும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் மாணவர்களின் கலை கலாசாரத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதான நிகழ்வாக பாடசாலைக்கான விடுதி வசதியினை அமைப்பதற்குரிய காணிப் பத்திரம் காணி உத்தியோகத்தர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பாடசாலை அதிபரிடம் பாடசாலை பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திசபை உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் ஓய்வுபெற்ற அதிபர்கள் ஆகியோரின் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் நிகழ்வின் இறுதியில் அதிபருக்கான பிரத்தியேக காரியாலயம் உத்தியோகபூர்வமாக அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் அல்- மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் பொருளாளரும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீத் மாணவர்களின் எதிர்காலத் தேவைகருதி எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக மருதமுனை-03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் கமு/அல்-மனார் மத்திய கல்லூரி மாணவர் விடுதி அமைப்பதற்காக 80 பேச்சர்ஸ் விஸ்தீரணமுள்ள அரச காணி வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலாளரிடம் பழைய மாணவர் அமைப்பின் பொருளாளர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து பாடசாலை அதிபர் ஐ. உபைதுல்லா 23.05.2023 ஆம்திகதி வலயக்கல்வி பணிப்பாளர் ஊடக முன்வைத்த கோரிக்கை 29.05.2023 அன்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதற்கமைய 2023.06.06ம் திகதி இடம்பெற்ற கல்முனை பிரதேச செயலக காணி பயன்பாட்டு குழுவின் தீர்மானத்திற்கு இணங்கவும் 2023.06.21 ஆம் திகதி நடைபெற்ற அம்பாரை மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாகவும் இந்த காணி அல்- மனார் மத்திய கல்லூரிக்கு மாணவர் விடுதியமைக்க வழங்கப்பட்டுள்ளது.

இதுவிடயத்தில் நமது பாடசாலை சார்பாக துரிதமாக காரியமாற்றிய பழைய மாணவர் அமைப்பின் பொருளாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீத், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி,கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஸஹ்துல் நஜீம், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜேகதீசன் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.மேற்படி விடயம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலக 2023.06.07 ஆம் திகதிய LAN/SUR.REQ/2023 ஆம் இலக்க(நில அளவை வேண்டுகோள் இல:KM/DS/2023/06) கடிதமும்,காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின்அம்பாரை மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் காரியாலயத்தின் LUPPD/13/13/01 ஆம் இலக்க 2023.06.26 ஆம் திகதிய கடித ஆவணங்களும் தன்னிடம் கையளிக்கப்பட்டன அதிபர் ஐ.உபைதுல்லாஹ் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர புதிதாக திறந்து வைக்கப்பட்ட அதிபர் விடுதி புனரமைப்பிற்காக அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க வலயக்கல்வி பணிப்பாளரின் சிபார்சுக்கமைவாக அல்- மனார் மத்திய கல்லூரியின் அபிவிருத்திச்சபை உறுப்பினரும் பழைய மாணவர் அமைப்பின் பொருளாளருமான வலீத் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்கவிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளிற்கமைவாக மாகாண கல்வித்திணைக்களத்தினால் மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.