பனங்காடு வைத்சியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டிடம் பாவனைக்காக கையளிப்பு


(எம்.ஏ.ஏ.அக்தார்)

உலக வங்கியின் நிதியுதவியில் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP திட்டத்தின் ஊடாக பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் திங்கட்கிழமை பாவனைக்காக வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

வெளிநோயாளர் மற்றும் கிளினிக் பிரிவுகளைக்கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடம் கையளிக்கும் நிகழ்வு பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.எம்.சகீல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாகவும், முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், தற்போதைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டொக்டர் ஜீ.சுகுணன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு குறித்த கட்டிடத்தினை கையளித்தனர்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வீ.பபாகரன், பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இல்ஹாம், பிராந்திய ஆயுள்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.நபீல், பனங்காடு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளான டொக்டர் எஸ்.குணாலினி, டொக்டர் எஸ்.நௌஷாட், டொக்டர் டிலினி மல்ஷா உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் என பலர் கலந்துகொண்டனர்.

பனங்காடு வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களான வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் மற்றும் டொக்டர் ஜீ.சுகுணண் ஆகியோர் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் இந்நிகழ்வின் போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.