சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் 8,000 இருதய நோயாளிகள் !
கண்டி தேசிய வைத்தியசாலையில் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு ஒன்று சேவையில் இல்லாததால் 8,000 இருதய நோயாளர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

கண்டி தேசிய வைத்தியசாலையில் இவ்வாறான இரண்டு பிரிவுகள் உள்ளது. அதில் ஒரு பிரிவு சேவையில் இல்லாததால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயறிதலுக்குத் தேவையான பெருமளவிலான இயந்திரங்கள் சேவையில் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய, சேவையில் ஈடுபடாத பல இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. எஞ்சிய இயந்திரங்களும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.