அரச தொழிற்சாலைகள் இரண்டில் உற்பத்தி செய்யப்படும் உரம் தேயிலை தொழில்துறையினருக்கு சந்தை விலையை விட குறைவாக வழங்கப்படும்!


அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசிபிக் மாநாட்டுக்கு இணையாக “Agri tech-24 Agricultural Technology Vision” கண்காட்சி நாளை (02) ஹம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப பூங்காவில் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்களில் நாடு முழுவதும் வெப்பமான காலநிலை நிலவுகிறது. இதனால் நீர் ஊற்றுகள் இல்லாமல் போகிறது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு ஒரே நாளில் முழு வயலிலும் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய சமூகத்திடம் கேட்டுகொள்கிறோம்.

மேலும், விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். நாற்று நடுதலுக்காக “பரசூட்” முறைமையை பயன்படுத்த வேண்டும். அது குறித்த பொறுப்பு விவசாய துறையினரை சார்ந்துள்ளது. வயல் உழுவதற்காக, “வட்டு கலப்பை” மற்றும் “மில் போட் கலப்பை” ஆகிவற்றை பயன்படுத்துமாறு கோருகிறோம். தற்போது வெற்றிகரமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்கள் அறுவடை இலக்குகளை அடைந்துகொள்ள மேற்படி முறைமைகளை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், கிடைக்கும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேலதிக பயிர் உற்பத்தி குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சோளம், பயறு போன்ற தானிய விளைச்சலில் ஈடுபடுபவர்களுக்கு உதவ தயாராக உள்ளோம்.

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் T-200, T-750, U-709, U 834, T 65 உள்ளிட்ட உரங்களின் விலை கடந்த காலங்களில் பெருமளவில் அதிகரித்திருந்தது. ஆனால், அந்த விலையை எம்மால் ஓரளவு குறைக்க முடிந்தது. தற்போது மேலும் விலையை குறைக்க எதிர்பார்க்கிறோம். எனவே, அரசாங்கத்திற்கு சொந்தமான கொமர்ஷல் , சிலோன் உரத் தொழிற்சாலைகளில் மேற்படி உர வகைகளை உற்பத்திச் செய்ய எதிர்பார்த்திருக்கிறோம்.

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உரத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர தேயிலை உரத்தை தேயிலை தொழில்துறையினருக்கு சந்தை விலையை விடவும் குறைவாக வழங்குவதே எமது நோக்கமாகும். அதன்படி குறைந்தபட்சம் 2000 ரூபாய் என்ற குறைந்த விலையில் இந்த உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கமைய மானிய விலையில் உரத்தை வழங்கும்போது தேயிலை உற்பத்தியை மேம்படுத்த முடியுமென கருதுகிறேன். மேலும்,தேயிலை தொழில்துறையிலும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த எதிர்பார்க்கிறோம்.

மேலும், அதிக பிரதிபலன்களை பெறுவதற்கான 59 திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 55 திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கரில் மாதாந்தம் 1350 கிலோ தேயிலை கிடைக்கிறது.குறித்த திட்டத்திற்காக இவ்வருடத்திலும் 1000 மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தூரநோக்கிலேயே விவசாயத்தை மேம்படுத்துவதற்கான இவ்வாறான திட்டங்கள் சாத்தியமாக செயற்படுத்தப்படுகின்றன. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு விவசாய அமைச்சுடன் இணைக்கப்படாவிட்டால் இந்த வேலைத்திட்டங்களை செய்திருக்க முடியாது. எனவே சரியான தீர்மானங்களை மேற்கொண்டமைக்காக ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசிபிக் மாநாட்டுக்கு இணையாக “Agri tech-24 Agricultural Technology Vision” விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கண்காட்சி நாளை (02) ஹம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப பூங்காவில் ஆரம்பமாகவுள்ளதோடு, மார்ச் 02, 03, 04, 05 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.