மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் !


பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளதாவது,

குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது.

எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால் கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம்.

சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம்.

மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள்.

சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம்.

எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.