முகத்தில் இரத்தக் காயங்களுடன் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு !


முகத்தில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நிவித்திகலை, வட்டாபொத , யொஹூன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஒத்தையடி பாதையில் இருந்து நேற்று (08) நிவித்திகல பொலிஸார் சடலத்தை கண்டு பிடித்துள்ளனர்.

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இவர் வட்டாபொத, யொஹூன் கிராமம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இறந்தவரின் தாயார் வட்டாபொத விகாரைக்கு அருகில் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதோடு, சம்பவத்தன்று சிறுமி பாடசாலைக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை விற்பனை நிலையத்திற்கு வருமாறு தாய் தொலைபேசி அழைப்பொன்றை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விற்பனை நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், தாய் வீட்டுக்கு ஒத்தையடி பாதை வழியாக சென்ற போது, ​​மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​இறப்பர் மரத்தில் வெட்டப்பட்ட இறப்பர் மரத்தின் கிளை சிறுமியின் மீது விழுந்ததில் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.