மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் இன்று (9) செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் மயிலத்தமடு மாதவனை பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களினால் முன்னெடுக்கப்படும் மேய்ச்சல் தரை அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தித் தொடர்ந்து போராடிவரும் கால்நடை பண்ணையாளர்கள் தாங்கள் போராட்டம் ஆரம்பித்து 300வது நாளான இன்று இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான வேலன் சுவாமிகள்,அருட்தந்தை ஜெகதாஸ்,எஸ்.சிவயோகநாதன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை லூத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமது மேய்ச்சல் தரை காணிகள் அபகரிக்கப்பட்டு தமது வாழ்வாதாரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்குப் பணிப்புரைகளை வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் வெளியேற்றப்படவில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மயிலத்தமடு மாதவனை பகுதியில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் அங்குள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை அங்கிருந்து அகற்றுமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளைக் கூட அமுல்படுத்தமுடியாத வகையில் பொலிஸார் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.