பதுளை பதுலுபிட்டியவில் வசிக்கும் மூன்று வர்த்தகர்களை ஏமாற்றி மூன்று கோடியே தொண்ணூற்று நான்கு இலட்சம் ரூபாவை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரங்கள், அழகு சாதனப் பொருட்கள், முச்சக்கரவண்டிகளின் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் வியாபாரத்தில் பங்குதாரர்கள் என்ற போர்வையில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸ் பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் இந்த வர்த்தகர்களிடம் பங்குதாரர்களின் பங்குகளுக்கு வட்டி தருவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த மோசடியில் ஏமாற்றப்பட்ட மூன்று வர்த்தகர்களும் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியதையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பதுளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.