ஜி. சிறிநேசன், முன்னாள் பா.உ ,மட்டக்களப்பு.
சிங்களத் தலைமைகளின் ஏமாற்றச் செயற்பாடுகளின் எதிர்வினையாக தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற செயற்பாடு உருவெடுத்துள்ளது.
மேலும், தமிழ்த் தேசியக்கட்சிகள் இப்படியாக மாற்றுவழி தேடுவதற்கு சிங்களக் கடும் போக்காளர்களின் பாரபட்சமான சிங்கள பெளத்த மேலாதிக்கமே காரணமாகும்.
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை ஒற்றையாட்சி,சிங்கள பெளத்த ஆட்சி என்பது பல்லின ஜனநாயகத்தை ஓரின வாட்சியாக மாற்றியுள்ளது.
இப்படியான ஓரின ஜனநாயகத்தில் தமிழ்த் தேசியம் என்பதை கிள்ளுககீரையாகப் பேரினவாதம் 75 ஆண்டுகளாகக் கருதி வருகின்றது.
இந்த நிலையில்தான், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழர்,தமிழ்த் தேசியம் சார் ஒற்றுமையையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் ஒரே குரலில் கூறுவதற்குத் தமிழ் சிவில் சமூகம், மற்றும் தமிழ்ப் புத்திஜீவிகள் நினைக்கின்றனர்.
இதனைத் தமிழ்த் தேசியக்கட்சிக்குள் புகுந்த சிலர் காரசாரமாக விமர்சிக்கின்றனர். இவர்கள் ஐந்தாண்டு சலுகை அரசியல் தொடர்பாகச் சித்திப்பதாக அறிய முடிகிறது. அதாவது தமிழ்த் தேசியத்தை வெற்றிக்கான தளமாக்கி,பின்னர் ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சர்களாக முடியும் என்று சிந்திக்கின்றார்களா? என்ற பலமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சலித்து விட்டது. அடுத்த நிலையில் அமைச்சர் பதவி நாட்டம் இருப்பதாகத் தெரிகிறது.
அவர்களை அமைச்சர்,முன்னாள் அமைச்சர்,கெளரவம் என்ற கனவுகள் ஆட்டிப்படைக்கின்றன. சிங்களத் தேசியத் தலைவர்களுடன் சேர்ந்து அமைச்சர்களான தமிழர்களால் இனப்பிச்சினை விடயத்தில் ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியவில்லை.
சுயநலத் தேவைகளான பதவி,பணம்,பந்தா மட்டுந்தான் அவர்களை அலங்கரிக்கும். மக்களுக்கு இதனால் பயனில்லை என்பதுதான் கடந்த காலப் படிப்பினையாகும்.