மட்டக்களப்பு காத்தான்குடி உணவு விடுதிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை !


மட்டக்களப்பின் காத்தான்குடி நகரசபைப் பிரிவில் உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகளை நேற்று முன்தினம் திங்கட்கிழமை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுற்றிவளைத்து சோதனை நடத்தினர்.

தமது வர்த்தக நிலையங்களில் சேரும் கழிவுநீரை பொது வடிகான்களுக்குள் விடுவதனூடாக ஏனைய வர்த்தகர்களும் பொதுமக்களும் பாதசாரிகளும் துர்நாற்றத்தை சுவாசித்தல், டெங்கு நுளம்புகளின் தொல்லை உள்ளிட்ட சுகாதார சீர்கேட்டினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து இச்சோதனை நடத்தப்பட்டதாக, காத்தான்குடி பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ.எம்.பஷீர் தெரிவித்தார்.

தமது வர்த்தக நிலையங்களின் கழிவுநீரை பொது வடிகான்களுக்குள் வெளியேற்றி ஏனைய வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்திய உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகளிலேயே பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை நடத்தினர்.

காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையின் போது பத்துக்கும் மேற்பட்ட உணவு விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டு, கழிவுநீர் வடிகான்களுக்குள் நீர் வழிந்தோடும் குழாய்கள் சீமெந்து கொண்டு நகர சபை ஊழியர்களால் அடைக்கப்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இனிமேல் தமது வர்த்தக நிலையங்களின் கழிவுநீரை பிரத்தியேக வழிகளை ஏற்படுத்தி அகற்ற வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.