வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திலிருந்து குறுகிய காலத்தில் மீண்ட உலகின் ஒரே நாடு இலங்கை ,அந்த கௌரவம் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்பட வேண்டும் - நிமல் லான்சா !



வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திலிருந்து மிகக் குறுகிய காலத்தில் மீண்ட உலகின் ஒரே நாடு இலங்கை எனவும் அந்த கௌரவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

சிலாபத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்த அவர், மேலும்தெரிவிக்கையில்,

“ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய மக்கள் தற்போது அணித்திரண்டு நிற்கின்றோம். பெற்றோல், டீசல், எரிவாயு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்றி நாடு தவித்திருந்தபோது நாட்டை நெருக்கடியிலிருந்து மீளக் கொண்டுவந்ததன் காரணமாக ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க சவாலுக்கு அஞ்சாமல், நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். சஜித்தும், அநுரவும் அந்த சவாலை ஏற்றுக்கொள்ளாது ஒதுங்கிய வேளையில், சவாலை ஏற்று நாட்டை பொறுப்பேற்ற தலைவரை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

மக்கள் வரிசையில் இறந்தனர், மருந்தின்றி இறந்தனர், வேலைக்குச் செல்ல எரிபொருளைப் பெற வரிசையில் பல மணிநேரங்களாக மற்றும் நாட்களாக அவதிப்பட்டனர். அவ்வாறிருந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றது அதிர்ஷ்டமே. நமது மனசாட்சிப்படி நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு கடமையை நிறைவேற்ற வேண்டும். திறைசேரியில் 10 மில்லியன் டொலர்கள் இல்லாமல், பல நாட்கள் எண்ணெய் கப்பல்களை விடுவிக்க வழி இல்லை. வேலைக்குச் செல்ல எரிபொருள் இல்லை. மீன்பிடி தொழிலுக்கு செல்ல வழியில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். எண்ணெய் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய இலங்கை வங்கியினால் எல்சீ வழங்கப்பட்டபோது ஏனைய நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் இன்று நாட்டைப் பாருங்கள். மீட்பது சாத்தியமற்றது என்று கூறப்பட்ட, எவரும் பொறுப்பெடுக்காத நாட்டை ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்டியெழுப்பினார். இன்று சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அன்றைய தினம் சுற்றுலா பயணிகளை வரவேண்டாம் என ஜே.வி.பியினர் கூறினார்கள். ஆனால் சுற்றுலா பயணிகள் வந்தனர். வெளிநாட்டு பணியாளர்களை பணம் அனுப்ப வேண்டாம் என்றார்கள். இன்று, ஹோட்டல் அறைகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன. பணவீக்கம் குறைந்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது. பொருட்களின் விலைகள் குறைந்து வருகின்றன. எரிபொருள் மற்றும் மருந்துகளின் விலை குறையும். இந்த இரண்டு ஆண்டுகளில் நாடு நெருக்கடியிலிருந்து விடுபட்டுள்ளது. பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து குறுகிய காலத்தில் மீண்டு வந்த ஒரே நாடு நமது நாடுதான். நமது பொருளாதாரம் சரிந்தபோது பங்களாதேஷ் எங்களுக்கு கடன் கொடுத்தது. இன்று பங்களாதேஷத்துக்கு என்ன நடந்தது? போராட்டக்காரர்கள் பங்களாதேஷை அழித்துள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நாடு மீண்டும் அந்த நிலைக்கு தள்ளப்பட வேண்டுமா? அந்த நிலைக்கு நாங்கள் வர தேவையில்லை. இந்த நாடு மீண்டும் பொறிக்குள் சிக்காமல் இருப்பதற்கு உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இந்த நாட்டை மீட்டெடுக்கும் வல்லமை படைத்த, சர்வதேச உறவுகளைக் கொண்ட, நாட்டின் ஜனாதிபதியாக அனுமதிக்கப்பட்டுள்ள அனுபவமிக்க தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்” என அவர் தெரிவித்தார்.