தமிழ் பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில் உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் : கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குமாரசாமி புஸ்பகுமார் !


தமிழ் பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில் உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அதற்காக எந்த நேரத்திலும் ஒத்துழைக்க தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்தார்.

அம்பாறை ஊடக அமையத்தில் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் திங்கட்கிழமை (30) இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ஏனெனில் கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு தரப்பினரும் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து எமது மக்களின் வாக்குகளை சிதறடித்தனர்.

இம்முறையும் அவ்வாறு எமது பிரதிநிதித்துவத்தை இழந்து விடாமல் இருப்பதற்கு சகல கட்சிகளும் ஒன்றிணைய சகலரும் ஒத்துழைப்பு செய்ய முன்வர வேண்டும்.

ஆனால் இன்று வரை எவரும் ஒன்றிணைவதற்கு முன்வராத சந்தர்ப்பத்தில் மக்களின் ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கி தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் தயங்க மாட்டேன். இன்றைய சூழலில் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற நிலைமையே அம்பாறை மாவட்ட தேர்தல் களநிலவரங்களில் தெரிகின்றது.

இந்த தேர்தலை பொறுத்தவரை பொதுமக்கள் ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை எற்பட்டுள்ளது.

விகிதாசார தேர்தல் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்களது நலனை நோக்காகவும் தேசியப்பட்டியலை இலக்காகவும் நோக்கி பயணிக்கின்றார்களே அன்றி மக்களின் நலனில் அக்கறையின்றி காணப்படுகின்றனர்.

இது தவிர பொது கட்டமைப்பு ஒன்றின் ஊடாக நாங்கள் போட்டியிடுவதன் ஊடாக மக்களின் விருப்பத்தை பெற முடியும்.

அத்துடன் 35 ஆயிரம் வாக்குகளை இத்தேர்தலில் பெறுவது தான் எமது இலக்காக உள்ளது.கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்ட கருணா அம்மான் தந்த பாடம் தான் இவ்வாறான நிலைமையினை நாம் எதிர் நோக்க காரணமாகின்றது .

எனவே அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ள கட்சிகள் தரப்பினர்சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.