இனிமேல் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை அணைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டாமென, பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் பிரிவுகளின் பிரதானிகளுக்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் அதனை அணைத்துவிட்டு, பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதனால் எதிர்பார்க்கப்படும் நோக்கம் ஈடு செய்யப்படவில்லை என தாம் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த இடத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரின் உழைப்பும் வீணடிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இதன் பின்னர் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் மூலம் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாத விசேட மற்றும் கடினமான நிலைமைகளைத் தவிர, சமிக்ஞை விளக்குகளை அணைத்து, பொலிஸ் அதிகாரிகளை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் பிரிவுகளின் பிரதானிகளுக்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.