சீரற்ற வானிலை - நாட்டின் தற்போதைய நிலை !

 

சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 120,534 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து 1,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

102 வீடுகள் முழுமையாகவும் 1,952 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தற்போதைய நிலைமை காரணமாக 28,324 குடும்பங்களைச் சேர்ந்த 94,134 பேர் உறவினர் வீடுகளிலும், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,303 பேர் 345 தங்குமிடங்களிலும் தங்கியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 43,631 குடும்பங்களைச் சேர்ந்த 149,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாவலி கங்கை, ஹெட ஓயா, தெதுரு ஓயா மற்றும் முந்தெனியாறு ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அவ்விடங்களின் ஊடாக பயணிக்கும் மக்களும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் நீர்ப்பாசன பொறியியலாளர்  ஜி.டபிள்யூ.ஏ.சகுரா தில்தாரா தெரிவித்தார். .

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக, 09 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு, கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன் எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.

கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்

மெததும்பர

உடுதும்பர

உடுநுவர

தொலுவ

பஹலஹேவாஹெட

ஹாரிஸ்பத்துவ

பாததும்பர

யடிநுவர

தெல்தொட

கங்கவட்ட  

உடபலாத


கேகாலை மாவட்டம்

அரநாயக்க

மாவனல்லை

எட்டியாந்தோட்டை

மாத்தளை மாவட்டம்

உக்குவெல

அம்பன் கங்கை 

நாவுல

வில்கமுவ

யடவத்த

பல்லேபொல

மாத்தளை

ரத்தோட்ட

லக்கல

பல்லேகம


நுவரெலியா மாவட்டம்

வலப்பனை

இதேவேளை, சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 3,183 இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்காக 239 படகுகள், 111 யுனிகோர்ன் வாகனங்கள், 40 உழவு இயந்திரங்கள் மற்றும் 64 லொறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

06 விமானங்கள் மற்றும் 08 ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று முதல் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்  பிரசன்ன குமார தெரிவித்தார்.