மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் , நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் - மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர்



மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2019 சிறார்கள் உட்பட நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்திநெத்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இதில் குறித்த சிறுவர்களின் தாயார் அல்லது தந்தையார் வெளிநாடு சென்றுள்ளது அல்லது சிறுவர்களை விட்டுவிட்டு தாய் அல்லது தந்தை வேறு திருமணம் முடிப்பது அல்லது போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற காரணங்களினால் தாய் தந்தை இல்லாது மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

அதேவேளை மேல் மாகாணத்தில் 2019 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதுடன் இலங்கை பூராகவும் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். எனவே இந்த குழந்தைகளுக்கு அன்பு , பராமரிப்பு, ஆதரவை வழங்குவதற்கும் அவர்களின் கல்வியை பல்வேறு வழியில் தொடர்வதை உறுதி செய்வதற்கு திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.

இத்துடன் மாவட்டத்தில ஆரையம்பதி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 600 பொலிஸார் கடமையாற்ற வேண்டிய நிலையில் 300 பொலிஸார் மாத்திரமே தற்போது உள்ளனர். எனவே இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய 50 பொலிஸாரை மாவட்டத்துக்கு வழங்கப்படும்.

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனைகளைத் தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையுடன்; பொலிஸார் இணைந்து ஒவ்வொரு பொலிஸ் நிலையப் பிரிவுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு இந்த சட்டவிரோத மதுபானத்தை இல்லாது ஒழிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக பிரதேச சபை தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடாத்தி கவலைகளை முன்வைத்தனர். இதற்கமைய புவியியல் சுரங்க பணியகம் ஒவ்வொரு நபருக்கும் வழங்கும் உரிமம் தொடர்பாக எந்த நேரத்திலும் பொலிஸார் பிரதேச செயலாளர், பிரதேச சபையினர் கேட்டால் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறே இன்றுவரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் தொடர்பாக உடனடியாக அரசாங்க அதிபருக்கும் மற்றும் அபிவிருத்திக்குழுத் தலைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அதேவேளை இந்த சட்டவிரோத மணல் அகழ்வோர் வாகனங்களை நிறுத்தி தேவையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், இரா சாணக்கியன். ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாணன பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜெயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மென்டிஸ், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தின, 15 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மட்டு அம்பாறை விசேட அதிரடிப்படை தளபதி, மட்டு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.