எப்படியாவது தனது காதலனை கரம் பிடித்தே ஆக வேண்டும் என நினைத்த விதுர்ஷியாவை பொலிஸார் கைது செய்து அகதிகள் முகாமில் அடைத்துள்ளனர். இந்தியா வருவதற்கு விண்ணப்பித்த போது அவருக்க்கு விசா வழங்க இந்திய தூதரகம் அனுமதி மறுத்து இருக்கிறது. இதனால் தான் அவர் கள்ளப்படகில் வந்துள்ளார்
இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழகத்தில் அகதிகள் வசித்த போது இங்குள்ள இளைஞருடன் காதல் வயப்பட்டு இருக்கிறார். சொந்த நாட்டிற்கு சென்ற போதும் காதலனை மறக்க முடியாத இளம்பெண், மீண்டும் படகு மூலமாக தமிழகத்திற்கு வந்த போது பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளார். ராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து பார்க்கலாம்.
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதி எப்போதும் கடலோர காவல் படை கண்காணிப்பில் உள்ள பகுதிகளில் ஒன்றாகும். இங்கு இருந்து இலங்கை மிகவும் பக்கம் என்பதால் கடல் வழியில் ஏதேனும் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா? சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.
இந்த நிலையில்தான், இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அகதியாக வந்து இருப்பதாக கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு பொலிஸார் விரைந்து சென்றனர். அப்போது அரிச்சல் முனை கடற்பகுதியில் இளம்பெண் ஒருவர் நிற்பதை கவனித்தனர். உடனடியாக அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்த உளவுப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அந்த இளம்பெண்ணின் பெயர் விதுர்ஷியா என்பதும், இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இவர் ஏற்கனவே வசித்து வந்ததாகவும் அப்போது அங்குள்ள கவி பிரகாஷ் என்பவரை காதலித்ததாகவும் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை சென்ற அவருக்கு பின்னர் இந்தியா திரும்ப விசா கிடைக்காமல் இருந்துள்ளது.
ஆனால், எப்படியாவது தனது காதலனை கரம் பிடித்தே ஆக வேண்டும் என நினைத்த விதுர்ஷியா, இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூலமாக தமிழ்நாடு வர முடிவு செய்துள்ளார். இதற்கான பணம் தன்னிடம் இல்லாததால், கையில் இருந்த நகைகளை விற்று ரூ.2 லட்சத்தை படகோட்டியிடம் கொடுத்துள்ளார். அந்த படகோட்டி ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் அரிச்சல் முனைக்கு வந்துள்ளார்.
விசாரணை முடிந்த நிலையில், அந்தப்பெண்ணை மண்டபம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் பொலிஸார் ஒப்படைத்தனர். ஏற்கனவே அகதிகள் முகாமில் வசித்து வந்த விதுர்ஷ்யா குடும்பத்தினர் 2016 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அரசு அனுமதியுடன் திரும்பி சென்றுள்ளனர். ஆனால், இலங்கையில் வாழ்வதற்கு தகுந்த சூழல் இல்லாததால், ஒரு மாதத்தில் மீண்டும் பழனிக்கே திரும்பியுள்ளனர்.
பழனியில் வசித்த நிலையில், அங்குள்ள இளைஞருடன் காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது காலாவதியான விசாவில் இருப்பதால் பதிவு திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், அபராத தொகையை செலுத்தி இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் இந்தியா வருவதற்கு விண்ணப்பித்த போதுதான் அவருக்கு விசா வழங்க இந்திய தூதரகம் அனுமதி மறுத்து இருக்கிறது.