பொது சேவையில் கடந்த 8 மாதங்களில் 62 000க்கும் மேற்பட்டோரை உள்வாங்குவதற்கு அனுமதி
பொது சேவையில் கடந்த 8 மாதங்களில் 62 000க்கும் மேற்பட்டோரை உள்வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களைப் போன்று எம்மால் அரசியல் நியமனங்களை வழங்க முடியாது. இனிவரும் காலங்களில் தேவைக்கேற்பவே அரச நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (12) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
இதுவரைக் காலமும் பட்டதாரிகளுக்கு அரசியல் ரீதியாகவே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமையவே அந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
எவ்வாறிருப்பினும் யார் நியமனத்தை வழங்கியிருந்தால் ஆட்சியிலிருக்கும் எந்தவொரு அரசாங்கமாயினும் அவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதை தவிர்க்க முடியாது. எனவே இனிவரும் காலங்களில் தேவைக்கேற்பவே அரச நியமனங்கள் வழங்கப்படும் என்பதை நாம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம்.
இதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய இடைக்கிடை பல நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த 8 மாதங்களில் 62 314 பேரை அரச சேவையில் உள்வாங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில நியமனங்கள் நிறைவடைந்துள்ளன. சிலவற்றுக்கு போட்டிப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. சிலவற்றுக்கு நேர்காணல்கள் இடம்பெறவுள்ளன.
இந்த 62 314 நியமனங்களில் பாதுகாப்பு அமைச்சு, தபால் திணைக்களம் உள்ளிட்ட பல துறைகள் உள்ளடங்குகின்றன. ஒரே சந்தர்ப்பத்தில் 50 000 – 60 000 பேருக்கு நியமனத்தை வழங்கி நெருக்கடிகளை உருவாக்க நாம் விரும்பவில்லை. எனவே தேவைக்கேற்ப உரிய கால கட்டத்தில் நியமனங்கள் வழங்கப்படும். எனவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு நியமனங்களைக் கோர வேண்டியதில்லை என்றார்.