
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் மோசடி நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற 5 சைபர் குற்ற மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், சைபர் குற்ற மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நோக்கங்களுக்காக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி போலி விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களில், மோசடி நோக்கத்துடன் நடத்தப்படும் சைபர் குற்ற மையங்களில் 11 இலங்கையர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் விசிப்பவர்களுக்கு மாத்திரமின்றி துபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைகளை வழங்குவதாகக் கூறி, சைபர் குற்ற மையங்களில் வேலைவாய்ப்புக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தாய்லாந்து, மியான்மர், கம்போடியா மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.