
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 02 தாதியர்கள் மற்றும் 02 குடும்பநல உத்தியோகத்தர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியருக்கு மன்னார் நீதவான் எம்.என்.சாஜித் பயணத்தடை விதித்துள்ளதுடன் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 28 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பெண் உயிரிழந்திருந்தார்.
மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்திருந்தமை பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒரு தாதியும் 02 குடும்பநல உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டு கடந்த வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படபோது மேலுமொரு தாதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
நால்வரையும் தலா 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.