
அரச வங்கிகள் மீது இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி, அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு செவ்சாய்க்கிழமை (12) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பே. கவாஸ்கரன் தலைமையில் நண்பகல் 12:30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர். அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில்,
"1996ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஓய்வூதியக் கொடுப்பனவு முறையின் உத்தேச திருத்தங்களை உடனடியாக செயற்படுத்துக"
"அரச வங்கிகளின் ஊழியர் உரிமைகளை பறிப்பதற்கு எதிராக அணிதிரள்வோம்"
"ஓய்வூதியக் கொடுப்பனவு முறை இல்லாத அரச வங்கிகளில் அந்த நடைமுறைகளை உடனடியாக நிறுத்துக"
"எச்.டி.எப்.சி. மற்றும் எஸ்.எம்.ஜ.பி. வங்கிகளின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க"போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஊழியர்கள் கலைந்து சென்றனர்.