பயன்படுத்தப்படாத காணி, வளங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி !


அரசாங்க நிறுவனங்களின் கீழுள்ள உபயோகிக்கப்படாத காணி மற்றும் வளங்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காக பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு,பிரதேச கைத்தொழில் நிறுவனம், தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை ஆகியவற்றின் கீழ் காணப்படும் உபயோகிக்கப்படாத காணியை இனம் கண்டு அந்த காணிகளை பொருளாதார ரீதியில் பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உட்பட தனியார் முதலீட்டாளர்களுக்கு இவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டது.

அந்த வகையில் பெருந்தோட்ட கைத்தொழில், விவசாய கைத்தொழில், சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள், கால்நடை அபிவிருத்தி, நீர் மின் உற்பத்தி, சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி, தொழிற்சாலைகள் உள்ளிட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் நன்னீர் மீன் வளர்ப்பு கைத்தொழில் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.