முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் ஐந்து இளைஞர்களை அழைத்துச்சென்றதற்காக இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்கின்ற போது இளைஞர்கள் அனுமதியின்றி முகாமிற்குள் உள்நுழைந்தார்கள் என்று எவ்வாறு குறிப்பிட முடியும். இந்த சம்பவத்தின் உண்மையையே வெளிப்படுத்த முனைகிறோம். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுவது முறையற்றது எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஞாயிற்றுக்கிழமை (17) அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்.இந்த ஊடக சந்திப்பில் இராணுவ ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் கலந்துக்கொண்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுக்கப்பட்ட ஹர்த்தால் பற்றி பேசப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் விசேடமாக குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.இந்த சம்பவம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல,இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் எப்பகுதியில் இடம்பெற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.அத்துடன் இதற்கு ஹர்த்தாலின் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
நாட்டில் ஏனைய மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பதை போன்று மக்கள் மத்தியில் இராணுவ பிரசன்னம் ஏதும் கிடையாது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தான் இராணுவத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.இதனை நாங்கள் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறோம்.
இராணுவத்தினரின் இடையூரின் ஒரு விளைவுதான் இந்த இளைஞனின் துரதிஸ்டவசமான மரணம்.இராணுவ முகாமிற்குள் அனுமதியன்றி நுழைந்தார்கள்.அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தற்போது குறிப்பிடுகிறார்கள். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுவது முறையற்றது.
முகாமிற்குள் சென்ற ஐவரையும் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்கான ஒரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிடுகிறார்.கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் இந்த ஐந்து பேரை இராணுவ முகாமுக்குள் அழைத்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது.இராணுவத்தினர் இவர்களை அழைத்து வந்திருப்பார்களாயின் அதனை அனுமதியற்ற நுழைவு என்று எவ்வாறு குறிப்பிட முடியும்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரரிடம் ' அனுமதியற்ற வகையில் முகாமிற்குள் நுழைந்தவர்களை இராணுவம் கைது செய்திருக்க வேண்டும்,அவர்களை கைது செய்யாமல் ஏன் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்'என்று கேள்வியெழுப்பப்படுகிறது.இதற்கு அமைச்சர் 'அவர்கள் சேர்ந்து வாழ பழகிவிட்டார்கள்.இவர்களுக்கிடையே நல்லதொரு உறவு உள்ளது.அதனால் அவ்வாறு நடந்தது' என்று பதிலளித்துள்ளார். இதைத்தான் வெளிக்கொண்டு வர வேண்டும்.
இராணுவமயமாக்கலின் சிறு உதாரணமே இது.இராணுவ முகாமை அண்மித்து வாழும் மக்கள் இராணுவ முகாமை அண்டி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இருதரப்பிற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகிறது.இதுவே மிகமோசமான சமூக பிரச்சினை.கடந்த 15 ஆண்டுகாலமாக இந்நிலைமையே காணப்படுகிறது. இதனையே தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறோம்.சுட்டிக்காட்டுகிறோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியினர் எதிர்க்கட்சியாக இருந்த போது இராணுவ மயமாக்கலுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தபோது அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இராணுவமயமாக்கலை தடுக்கவில்லை.இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை.
இராணுவத்தினர் மக்கள் மத்தியில் ஒன்றிணைந்திருப்பதால் ஏற்படும் விளைவுளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோம்.எவரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது.மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட கூடாது.
காலையில் (இன்று) மாத்திரம் ஹர்த்தாலில் ஈடுபடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கிறோம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் ஸ்தம்பிதமடையும் வகையில் ஹர்த்தாலில் அனைவரும் ஈடுபட வேண்டும்.காலை முதல் மதியம் வரை ஹர்த்தாலை ஹர்த்தாலில் ஈடுபட்டு இந்த செய்தியை வெளிப்படுத்த வேண்டும்.
விடேசமாக நல்லூர் திருவிழா நடைபெறுகிறது.இதனையும் கரிசனையில் கொண்டு செயற்பட வேண்டும்.இந்த ஹர்த்தால இராணுவ பிரசன்னத்துக்கு எதிரானது என்ற செய்தியை அரசாங்கத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
முத்தையன்கட்டு உட்பட மக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறோம்.இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக எதிர்வரும் 25 ஆம் திகதி பருத்தித்துறை நகராட்சிமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவுள்ள போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.