தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் சர்வாதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்த மாபெரும் எதிர்ப்பு பேரணியை கொழும்பில் நடத்துவதற்பு தீர்மானித்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து விசேடமாக கலந்துரையாடியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உட்பட முக்கிய அரசியல் கட்சிகள் கொழும்பில் ஒன்றுக்கூடி கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களின் விசேட சந்திப்பு மற்றும் இரவு விருந்துபச்சார நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மற்றும் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் இருந்துள்ளனர். இதன் போது சமகால அரசியல் விடயங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைள் உட்பட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் மாபெரும் பேரணி ஒன்றை கொழும்பில் நடத்துவதற்கு இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது. அதே போன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தொடர்ந்தும் செயல்படுவதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
குறிப்பாக எதிர்க்கட்சியாக ஒன்றிணைந்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சில முக்கியமான கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. இந்தச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து யோசனைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நமால் ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்கள் இணக்கத்தை தெரிவித்தனர். இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தமை குறிப்பிட்டத்தக்கது.