சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பாதிப்பு தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் !



எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய சிறுவர் அதிகார சபையின் அதிகாரியான நிலந்தி புஷ்பகுமாரி தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கானதொரு தேசிய கட்டமைப்பை நிறுவுவதே தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு சபையின் பிரதான நோக்கமாக உள்ளது. இதற்கான தேசிய கொள்கையும் காணப்படுகின்றது.

சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க தேவையான சட்ட, சமூக மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான அடித்தளமாக அக்கொள்கை செயற்படுகிறது. சிறுவர்களின் உரிமை மீறல்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கையில் அரச மற்றும் அரச சாரா நிறுவனங்கள் மூலம் வழிமுறைகள் இருந்தாலும், ஒருங்கிணைப்பு மற்றும் சரியான செயற்படுத்தல் இல்லாதமையானது பெரியதொரு தடையாக உள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை உலகளவிய ரீதியிலும் உள்நாட்டிலும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பங்களிக்கிறது. அபாச இணைய தளங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள வேறுவகையான வலைத்தளங்களில் சிறுவர்களின் கிட்டத்தட்ட 100,000 நிர்வாண புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஒவ்வொரு சிறுவர்களுக்கும், வன்முறை, சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் அதேநேரத்தில் அவர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்றார்.