பிங்கிரிய பொலிஸ் பிரிவின் தலுபொத்த வீதியில் குருலுவெல பகுதியில் பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
தலுபொத்த நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் செலுத்துனரும் பின்னால் அமர்ந்து சென்ற பெண் பயணியும் படுகாயமடைந்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு செலுத்துனர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் நாகொல்லாகொடவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
இதேபோல், மாத்தறை-திஸ்ஸமஹாராம வீதியில் தங்தெனிய பகுதியில் திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த பேருந்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மொரகொல்லாகமவைச் சேர்ந்த 51 வயதான பெண்ணே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம் காரைநகர்-கருங்காலி வயல்வௌி பகுதியில் நடந்த விபத்தில் 34 வயதான ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வயலில் கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் பண்டாரிகுளம் பகுதியில், ஒட்டுசுட்டானில் இருந்து நெடுங்கேணி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் சென்ற மாடு மீது மோதி கவிழ்ந்து எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண் பயணியும் பலத்த காயமடைந்து ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செலுத்துனர் உயிரிழந்தார்.
இறந்தவர் நெடுங்கேணியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது.
பெண் பயணி மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸா் தெரிவித்தனர்.